ஸ்ரீலங்காவில் சுகாதார விதிமுறைகளில் குறைபாடுகள்- பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாதுகாப்பு செயலர்!

14.01.2021 11:27:32

உக்ரைனிலிருந்து அழைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகையின் போது ஸ்ரீலங்காவில் சுகாதார விதிமுறைகளில் சில குறைபாடுகள் இருந்ததாக ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு மேலும் சுற்றுலாப் பயணிகளை விரைவில் அனுமதிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

உண்மையிலேயே ஸ்ரீலங்காவில் சுற்றுலாத்துறையில் வாழ்கின்ற, குடும்பங்களை நடத்துகின்ற, பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கின்ற மற்றும் பிள்ளைகளுக்கு உணவளிக்கின்ற பலரும் இருக்கின்றார்கள். இவ்வாறு மூன்று இலட்சத்துக்கும் அதினமானவர்கள் இங்கு இருக்கின்றனர் என்றே நான் நினைக்கின்றேன்.

கடந்த வருடங்களில் சுற்றுலாத்துறை மிகவும் வீழ்ச்சிகண்டது. அதனால் பலருடைய குடும்பங்களும் செல்லவழியின்றி திணறிப்போயுள்ளன. இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மீண்டும் சுற்றுலாத்துறையை திறப்பதற்கு ஊக்கப்படுத்துவதற்கு சுகாதார முறைகளுக்கு அமைய சிறிது சிறிதாக சுற்றுலாத்துறையை திறப்பதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதன் முதற்கட்டமாகவே உக்ரைனிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீலங்காவிற்கு வர அனுமதிக்கப்பட்டது. இதில் சில குறைபாடுகள் இருக்கின்றன. எனினும் அவற்றை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இருந்த போதிலும் இதனை தொடர்ந்து முன்னெடுப்பதால் ஏற்படுகின்ற குறைபாடுகளை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்துகொண்டு தொடர்ந்தும் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுப்போம். சுகாதார முறைகளுக்கு அமைய மேலும் பல சுற்றுலாப் பயணிகளை அழைத்துவருவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உக்ரைன் நாட்டிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீலங்காவிற்குள் அனுமத்திருப்பதை கண்டித்து வருகின்ற எதிர்கட்சியினர், இதனால் இலங்கையில் மேலும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயமே இருப்பதாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.

கொரோனாவை பயன்படுத்தி ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் ராஜபக்சவினரின் நெருங்கியவர்களின் விடுதி நிர்வாகத்தினருக்கு இலாபம் ஏற்படும் வகையிலான வர்த்தகத்தையே அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.