ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம் !

25.03.2021 09:37:59

 

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானதென கோட்டாபய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவை (யு.என்.எச்.ஆர்.சி) இலங்கை தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய போதிலும், இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படும்.

சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்ததாகவும், முன்னாள் அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முந்தைய ஆவணத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஆவணத்தின் இணை அனுசரணையாளர்களின் தீர்மானம் மற்றும் விபரங்களையும் அவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அத்துடன் முன்னாள் அரசு இணைந்து வழங்கிய தீர்மானம் “பெரும் துரோகம்” என்று தினேஷ் குணவர்தன கூறினார்.

புதிய தீர்மானத்திற்கு ஐ.நா. பேரவையில் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

“இலங்கை இந்த தீர்மானத்தை தேவையற்றது என்று கருதுகிறது. இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் சட்டவிரோதமானது, ”என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்

இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும் அந்த இறையாண்மையைப் பாதுகாக்கும் என்றும் குணவர்தன கூறினார்.

இலங்கையில் தேர்தல்கள் தொடர்பாக கவுன்சில் எழுப்பியுள்ள கவலைகளையும் அமைச்சர் நிராகரித்தார்.

இலங்கையில் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளை உள்நாட்டு பொறிமுறையின் மூலம் அரசாங்கம் தீர்க்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.