அழிந்தே போவீர்கள்! அரசை எச்சரித்த ரிசாட் எம்.பி

08.04.2021 09:22:15

இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களை அடக்க நினைக்காதீர்கள். நாட்டின் மீது பாசத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

இதை மீறிச் செயற்பட்டால் உங்களுக்குத் தான் வீழ்ச்சி ஏற்படும் - அது அழிவிற்கே வழிவகுக்கும் என அரசை எச்சரித்தார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன்.

நாடாளுமன்றத்தில் நேற்று உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு எச்சரித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

இலங்கையில் கடந்த 10 வருடங்களாகவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தக் காலப்பகுதியில் அளுத்கம், திகண, கொழும்பு கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது சஹ்ரானின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால் உண்மையான முஸ்லிம்கள் சஹ்ரான் போன்றோரது செயற்பாடுகளை அங்கீகரிக்க மாட்டார்கள்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

அதேபோன்று அந்த விடயத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அப்பாவிகளை விடுதலை செய்யவேண்டும் என்றார்.