தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா – உயிரிழப்பு அபாயம் இல்லை என ஆய்வில் தகவல்!

06.06.2021 10:05:59

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு நேராது என எய்ம்ஸ் வைத்தியசாலை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் வைத்தியசாலை, “2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் கொரோனா வந்த 36 நோயாளிகளும் ஒரு டோஸ் செலுத்திக்கொண்ட பின்னர் தொற்று பாதிப்புக்குள்ளான 27 பேரும் என 63 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் 10 பேர் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். எஞ்சியவர்கள் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்.

தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் அனைத்து நோயாளிகளுக்கும் பரிசோதனையின்போது வைரஸ் அளவு அதிகமாக இருந்தது.

காய்ச்சலும் இருந்தது. இந்த காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை இருந்தது. இது தடுப்பூசி போடாமல் கொரோனா பாதித்தவர்களைப் போன்றே இருந்தது.

நோயாளிகளின் உடலில் தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு பொருள் உருவாகி இருந்தாலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனைய நோயாளிகளைப்போலவே வைத்தியசாலையில் அனுமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் மரணம் நேரவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.