வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை

18.04.2021 10:40:52

இலங்கைக்கு வருகை தரும் தனிநபர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றின் நேர்மறையான நிகழ்வுகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்டு, வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை  விதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதாத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஒரு அறிக்கையொன்றில், இலங்கையில் 2021 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 52,710 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அவற்றில் 1,593 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களாவர்.

மத்திய கிழக்கிலிருந்து வந்தவர்களிடமிருந்தும், ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களிடமிருந்தும் ஏராளமான நேர்மறையான வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொற்றுநோயியல் பிரிவின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களில் 78 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதாவது மூன்றாவது மற்றும் நான்காவது கொரோனா வைரஸ் அலைகள் தொடர்ந்து நேர்மறையான நிகழ்வுகள் அதிகம் குவித்து வருவதால், சில நாடுகள் ஏற்கனவே வெளிநாட்டு பயணங்களை நிறுத்த தீர்மானித்துள்ளன.

அந்தவகையில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை சமீபத்தில் மேற்கொண்ட முன்னேற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.