எச்சரிக்கின்றார் பேராசிரியர் ருசிரா குமாரதுங்க - மீன்களால் ஏற்படும் புற்றுநோய் !

04.06.2021 10:30:10

 

'எக்ஸ்பிரஸ் பேர்ல்' கப்பலின் விபத்தினால் கடலில் கலக்கப்பட்டுள்ள இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை உணவாக்கிக்கொள்ளும் கடல்வாழ் உயிரினங்களை நாம் உட்கொள்ளும் வேளையில் அவை நீண்டகால அல்லது குறுகியகாலத்தில் புற்றுநோய் போன்ற நோய்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாக உயிரியல் மற்றும் கடல்சார் தொழிநுட்ப பேராசிரியர் ருசிரா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கடல் பரவில் மூழ்கிக்கொண்டுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியாகியுள்ள இரசாயன பதார்த்தங்கள், பிளாஸ்டிக் துண்டுகள் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கடல் உயிரினங்கள் எதிர்கொள்ளவுள்ள விளைவுகள் குறித்து தெளிவுப்படுத்துகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடல் உயிரினங்களை பொறுத்தவரையில் இந்த காலத்திலேயே இனப்பெருக்கம் செய்யும். மீனினங்கள் மற்றும் ஏனைய கடல் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய கரையை நோக்கி வேகமாக வரும் காலகட்டமாகும். அவ்வாறானதொரு நிலையில் துரதிஷ்டவசமாக எமது கடல் பரப்பில் நச்சு இரசாயன பதார்த்தங்கள் கலக்க நேர்ந்துள்ளது.

சில வேளையில் எமது கடல் பரப்பில் ஏற்பட்டுள்ள விபத்தை மீனினங்கள் உணர்ந்தால் அவைகள் தமது பயணப்பாதையில் இருந்து விலகவும் வாய்ப்புகள் உள்ளது. எவ்வாறு இருப்பினும் இப்போது கடலில் கலந்துள்ள இரசாயனங்கள் காரணமாக கடல் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

குறிப்பாக பிளாஸ்டிக் துண்டுகள் கடலில் கலந்துள்ளன. இவற்றை மீன்கள் உண்பதற்கு அதிக வாய்புகள் உள்ளன. அதேபோல் கடலில் கலக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் நீருடன் கலந்து சூரிய ஒளியின் தாக்கங்கள் அதன்மேல் பட்டால் அவை வேறு இரசாயன பதார்த்தங்களாக மாற்றமடையலாம்.