எதிர்பார்ப்பு மிக்க சிம்பாப்வே அணி அறிவிப்பு - ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்

18.02.2021 11:21:16

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க சிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் இலங்கையில் அறிமுகமான 26 வயதான டரிசாய் முசகந்தா, நீண்ட இடைவேளைக்கு பிறகு அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அனுபவம் வாய்ந்த வீரர்களான பிரெண்டன் டெய்லர் மற்றும் கிரேக் எர்வின் உடல்நலக்குறைவு காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

அத்துடன் டெண்டாய் சடாரா மற்றும் சாமு சிபாபா ஆகியோரும் முறையே வலது மேல் கை மற்றும் தொடை தசைக் காயங்களிலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதால் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

இந்த வாரம் ஒரு பயிற்சி போட்டியின் போது பி.ஜே. மூருக்கு தொடை எலும்பு காயம் ஏற்பட்டதால் அவரும் அணியில் இடம்பெறவில்லை.

சீன் வில்லியம்ஸ் தலைமையிலான அணியில், ரியான் பர்ல், சிக்கந்தர் ராசா பட், ரெஜிஸ் சகாப்வா, கெவின் கசுசா, வெஸ்லி மாதேவெர், வெலிங்டன் மசகாட்ஸா, பிரின்ஸ் மஸ்வாரே, பிராண்டன் மாவுட்டா, டரிசாய் முசகந்தா, ரிச்மண்ட் முத்தும்பாமி, பிளெஸிங் முசராபானி, ரிச்சர்ட் நாகரவா, விக்டர் நியாச்சி, டொனால் டிரிபானோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்த மாத ஆரம்பத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சிம்பாப்வே அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலும் விளையாடவுள்ளது.

இதில் முதலாவதாக நடைபெறவுள்ள ரி-20 தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ளது.