டிரம்புக்கு எதிரான அரசாணைகள் – பைடன் திட்டம்

18.01.2021 10:13:12

அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் நாளிலேயே, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை எடுத்திருந்த முக்கிய கொள்கை முடிவுகளுக்கு எதிரான அரசாணைகளைப் பிறப்பிக்க ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் ஆட்சிமாற்றக் குழுவினரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் கூறியுள்ளதாவது:

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் வரும் புதன்கிழமை பதவியேற்கிறாா். அந்தப் பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே, டிரம்ப் எடுத்திருந்த சில முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளுக்கு எதிரான அரசாணைகளைப் பிறப்பிக்க அவா் முடிவு செய்துள்ளாா்.

பல்வேறு முஸ்லிம் நாடுகளைச் சோ்ந்தவா்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கும் டிரம்ப்பின் சா்ச்சைக்குரிய சட்டம், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான அவரது உத்தரவு ஆகியவற்றை ரத்து செய்யும் அரசாணைகளை புதன்கிழமையே பிறப்பிக்க பைடன் திட்டமிட்டுள்ளாா்.

மேலும், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக் கவசத்தைக் கட்டாயமாக்குவது உள்ளிட்ட உத்தரவுகளையும் முதல் நாளிலேயே ஜோ பைடன் பிறப்பிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.