கே.வி.ஆனந்த் மறைவுக்கு இயக்குனர் ஷங்கர் இரங்கல் - அன்பு நண்பரை இழந்துவிட்டேன்

30.04.2021 09:46:43

இயக்குனரும், கே.வி.ஆனந்துடன் முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களில் பணியாற்றியவருமான ஷங்கர், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. இவர் அயன், மாற்றான், கோ, அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கி உள்ளார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இயக்குனரும், கே.வி.ஆனந்துடன் முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களில் பணியாற்றியவருமான ஷங்கர், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கே.வி.ஆனந்த் மறைந்த செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். என் இதயம் கனக்கிறது. என்னால் இதை ஏற்க முடியவில்லை. அன்பு நண்பரை இழந்துவிட்டேன். கே.வி.ஆனந்த், ஒரு அற்புதமான ஒளிப்பதிவாளர், அட்டகாசமான இயக்குனர். இந்த இழப்பை ஈடுசெய்யவே முடியாது. உன்னை மிஸ் பண்றேன் அன்பு நண்பா. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.