இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: மே.தீவுகள் அணி 99 ஓட்டங்கள் முன்னிலை !

23.03.2021 09:38:06

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி நேற்றைய (திங்கட்கிழமை) ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேரமுடிவில், ராகீம் கோர்ன்வோல் 60 ஓட்டங்களுடனும் கெமர் ரோச் 4 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், சுரங்க லக்மால் 5 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் லசித் எம்புல்தெனிய 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி 99 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

ஆண்டிகுவா மைதானத்தில் நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 169 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, திரிமன்னே 70 ஓட்டங்களையும் டிக்வெல்ல 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ஜேஸன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும் கெமர் ரோச் 3 விக்கெட்டுகளையும் கோர்ன்வோல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இன்னும் 2 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாவது நாளை, மேற்கிந்திய தீவுகள் அணி, இன்று தொடரவுள்ளது.