அன்னை பூபதியின் அகிம்சை போராட்ட ஆரம்ப நாள் இன்று!

19.03.2023 15:37:23

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவேந்தல் மாதத்தின் முதலாம் நாள் இன்றைய தினம் மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அன்னரின் கல்லறையில் கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

பல தரப்பினர் நினைவேந்தல்

இதன்போது கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், அன்னையின் கல்லறைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி ஈகைச் சுடரேற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதற்கு முன்னதாக அன்னை பூபதியின் மூத்த மகளான லோகேஸ்வரன் சாந்தி அவர்களினால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சிவில் செயற்பாட்டாளரான வி.லவக்குமாரும் அன்னையின் கல்லறைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

நினைவேந்தல் மாதம்

அன்னை பூபதி தமிழ் மக்கள் தொடர்பிலான பல கோரிக்கைகளை முன்வைத்து பங்குனி மாதம் 19ஆம் திகதியாகிய இன்றைய நாளில் உண்ணா நோன்பினை ஆரம்பித்து தொடர்ச்சியாக ஒரு மாதகாலம் கடைப்பிடித்து இறுதியில் சித்திரை 19ஆம் திகதி உயிரைத் தியாகம் செய்திருந்தார்.

அதனை நினைவுகூரும் முகமாக அன்னை பூபதி உண்ணா நோன்பினை ஆரம்பித்த நாள் முதல் அவர் உயிர்த்தியாகம் செய்த நாள் வரையான காலப்பகுதியினை அவருக்கான நினைவேந்தல் மாதமாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு உள்ளிட்ட சர்வதேச ரீதியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.