ஈரானிய குழுக்களால் சவுதிக்கு நிலவும் அச்சுறுத்தல் குறித்து பைடன்- சவுதி மன்னர் பேச்சு !

27.02.2021 10:10:42

சவுதி அரேபியாவுக்கு ஈரானிய ஆதரவு பயங்கரவாத குழுக்களால் நிலவும் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தொலைபேசி வாயிலாக நேற்று (வெள்ளிக்கிழமை) இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இரு நாட்டுத் தலைவர்களும், தங்கள் நாடுகளுக்கு இடையிலான உறவு குறித்தும், சவுதி அரேபியாவுக்கு ஈரானிய ஆதரவு பயங்கரவாத குழுக்களால் நிலவும் அச்சுறுத்தல் குறித்தும் விவாதித்தனர்.

மேலும், யேமனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதுப்பிக்கப்பட்ட இராஜதந்திர முயற்சிகள் குறித்து விவாதித்தனர்.

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இதுவரை சீன ஜனாதிதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புடின், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோருடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு அமெரிக்கா அளிக்கும் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.