இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார்.

27.02.2021 10:18:11

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலிருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார்.

வலக் கை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா, தனிப்பட்ட காரணங்களுக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை விளக்கம் அளித்துள்ளது.

27 வயதான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அகமதாபாத்தில் நடந்த பகல்-இரவு டெஸ்டுக்காக இந்தியாவின் விளையாடும் பதினொருவர் அணிக்கு திரும்பியிருந்தார். ஆனால் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆறு ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார்.

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசிய பும்ரா, 48 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளுடன் தொடரை முடிப்பார்.

அணியின் பணிச்சுமை காரணமாக, சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இருந்தும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

எதிர்வரும் நான்காவது டெஸ்டில் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் இடம்பெறுவதில் முன்னணியில் உள்ளார். அதேபோல அனுபவம் வாய்ந்த உமேஷ் யாதவை திரும்ப அழைப்பதற்கான ஆர்வமும் இந்தியா அணிக்கு உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.