சுகாதார அமைச்சர் தலைமையில் கொரோனா வைரஸை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக விசேட கூட்டம்

10.05.2021 10:34:17

 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய சூழ்நிலையில் முன்னெடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றுள்ளது.

குறித்த விசேட கூட்டத்தில் சிறப்பு செயல்திறன் மறுஆய்வுக் குழு மருத்துவ நிர்வாகிகள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கொவிட் தடுப்பூசி திட்டத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவதுடன்  ஏனைய மாவட்டங்களிளும் கோவிட் தடுப்பூசி திட்டத்தை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை பி.சி.ஆர்.சோதனைகளின் எண்ணிக்கையை  மேலும் அதிகரித்தல் மற்றும் மாவட்ட அளவில் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் கூட்டத்தில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாதிரி சோதனை அறிக்கைகளை விரைவாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை பி.சி.ஆர்.சோதனைக்கு உட்பட்டவர்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தடுக்க ஒரு திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சுகாதார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க மற்றும் டாக்டர் அசெல குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.