பாறை மீது படகு மோதி கடலில் மூழ்கியது - 4 பேர் பலி

04.05.2021 10:48:28

அமெரிக்காவில் பாறை மீது படகு மோதி விபத்துக்குள்ளானதில் படகில் பயணம் செய்த 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இவர்களில் ஒரு பிரிவினர் ஆள்கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்து தரை வழியாகவும், கடல் வழியாகவும் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.

அந்த வகையில் ஆள்கடத்தல் கும்பல் ஒன்று அகதிகளை படகில் ஏற்றிக்கொண்டு மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தது.

நேற்று முன்தினம் இந்த படகு சாண்டியாகோ நகருக்கு அருகே கடலில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஒரு பாறையின் மீது மோதியது.

இதில் படகு உடைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதுகுறித்து உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.‌ அதன் பேரில் விரைந்து சென்று மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

அதேசமயம் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஆள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்துக்காக படகின் கேப்டனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.