ரஜினியுடன் மோத தயாராகும் கமல் ?

08.04.2021 10:51:46

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, கமல் ஆகியோர் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படமும் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தை கமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு திட்டமிட்டபடி முடிக்கப்பட்டால், இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் சந்திரமுகியும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் கடந்த 2005-ம் ஆண்டு ஒரே நாளில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.