தமிழ் மக்களை அரசு அநாதைகளாக்க முயன்றபோது உரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல் இன்று அமைதியாக உறங்குகின்றது!

01.04.2021 09:34:46

 

முன்னாள் மன்னார் மறைவாட்ட பேராயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகையின் மறைவுச் செய்தியறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துயர் பகிர்ந்துள்ளது.

மேலும் ஈழத் தமிழரின் உரிமைக்கான போராட்ட காலத்திலும், போர் நிறைவுபெற்றதன் பின்னரும், ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்களின், பலமான குராலாக செயற்பட்ட பேராயர் இராயப்பு யோசேப் ஆண்டகையின் மறைவு கத்தோலிக்க திருச்சபைக்கும், தமிழ் தேச மக்களுக்கும் ஈடுசெய்யப்பட முடியாத பேரிழப்பாகும்.

ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தை இன அழிப்பு யுத்தம் மூலம் 2009 மே 18 இல் முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்க முயன்றபோது, தமிழ்த் தேசத்தில் நடைபெற்ற இனவழிப்புக்கு நீதி கோரி, சர்வதேச பொறுப்புக் கூறலை எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி வலியுறுத்தி, தமிழ் சிவில் சமூக அமையத்தினூடாக ஆண்டகை தலைமை வழங்கியிருந்தார்.

குருத்துவத்தின் புனிதத்தையும், மேன்மையையும் தாங்கி, ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் உண்மையானதும் நீதியானதுமான பொறுப்புக்கூறலுக்காக, பேராயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகையின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

ஆண்டகையின் வெற்றிடத்தை நிரப்புவது என்பது கடினமான பணியாகும். ஈழத்து திருச்சபையின் பணியாளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை ஆண்டகையின் வாழ்வும் குருத்துவமும் எடுத்துக்காட்டியுள்ளது.

யேசுக்கிறிஸ்து பணிக்குருத்துவத்தை நிறுவியதை நினைவு கூரும், புனித வியாழன் நாளாகிய இன்று மேதகு ஆண்டகையும் தனது தலைமைக் குருவின் திருப்பாதம் நாடிச்சென்று அமைதியில் உறங்குகின்றார். மேதகு ஆண்டகையின் பேரிழப்பால் துயருறும் கத்தோலிக்க திருச்சபையினதும், அவரது குடும்பத்தினரதும் துயரில் ஈழத் தமிழ் மக்களுடன் இணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாமும் பங்குகொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இறைவனின் உன்னத திருப்பாதம் நாடிச்சென்ற ஆண்டகை, இறைவனின் அருகில் இருந்து, விடுதலைக்காக ஏங்கும் தமிழ் தேச இனத்துக்காக பரிந்துபேசி, எமக்கான சக்தியை வழங்குபவராக, தொடர்ந்தும் இருப்பார் என்னும் நம்பிக்கை எமக்குண்டு.

தமிழ் மக்களுக்கான நீதிக்காக ஓங்கி ஒலித்த குரல் இன்று அமைதியில் உறங்குகின்றது. தமிழ் மக்களின் உணர்வுகளுடன் கலந்து, உடலால் அமரத்துவம் அடைந்த ஆண்டகையின் ஆன்மா நித்திய அமைதி அடைவதாக.

இன்றிலிருந்து மேதகு ஆண்டகையின் திருவுடல் அடக்கம் செய்யப்படும் வரை தமிழ்த் தேசத்தில் துக்க நாளாக அனுஸ்டிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.