வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், மகுடத்திற்கான இறுதிப் போட்டியில் இந்தியா ஜாம்பவான்கள் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

22.03.2021 12:23:05

 

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், மகுடத்திற்கான இறுதிப் போட்டியில் இந்தியா ஜாம்பவான்கள் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ராய்பூர் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்தியா ஜாம்பவான்கள் அணியும் இலங்கை ஜாம்பவான்கள் அணியும் மோதின.

பெரும் எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஜாம்பவான்கள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஜாம்பவான்கள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, யூசப் பதான் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும் யுவராஜ் சிங் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரங்கன ஹேரத், சனத் ஜெயசூரிய, மஹரூப் மற்றும் வீர ரத்ன ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 182 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை ஜாம்பவான்கள் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அத்துடன் இந்தியக் கிரிக்கெட் அணி முதல்முறையாக நடைபெற்ற வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், முதல் சம்பியன் கிண்ணத்துக்கு முத்தமிட்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சனத் ஜெயசூரிய 43 ஓட்டங்களையும் சின்த்தக ஜெயசிங்க 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், யூசப் பதான் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மன்பீரிட் கோனி மற்றும் முனாப் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும் 2 விக்கெட்டுகளையும் சாய்த்து வெற்றிக்கு வித்திட்ட யூசப் பதான் தெரிவுசெய்யப்பட்டார்.

தொடரில் எட்டு போட்டிகளில் விளையாடி 271 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட திலகரட்ன டில்சான் தொடரின் நாயகனாக, தெரிவுசெய்யப்பட்டார்.