முக்கிய படுகொலை வழக்குகளை முடக்க சதி!

20.04.2021 10:47:59

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை வழக்குகளை இல்லாமல் செய்வதற்காக சுதந்திர இல்கையில் முதல் முறையாக, பிரேரணை கொண்டு வந்துள்ளனர் என்று எதிர்கட்சி உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

 

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையில் 9ம், 10ம் பிரிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை நாடாளுமன்றில் நிறைவேற்ற முயற்சிக்கின்றனர்.

அதில் குற்றவியல் வழக்குகளை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது. அதனை நிறைவேற்ற நாடாளுமன்றில் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

அதில் நடராஜா ரவிராஜ் படுகொலை, ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தி தாக்கப்பட்டமை, வெலிக்கடை சிறை கொலைகள் தொடர்பான வழக்குகள் உள்ளன.

எனவே அந்தப் பிரேரணை நிறைவேறினால் அவை அனைத்தும் செல்லுபடியற்றதாக ஆக்கப்படும். நீதிமன்றம் செய்ய வேண்டிய விடயத்திற்காக சுதந்திர இலங்கையில் முதற் தடவையாக நாடாளுமன்றுக்கு இந்த பிரேரணை வருகிறது எனவும் குறிப்பிட்டார்.