கலாசார மத்திய நிலையம் மாநகர சபைக்கானதே - ஆளுரிடம் சி.வி.கே. முக்கிய கோரிக்கை - யாழ் ஆளுரிடம் சி.வி.கே. முக்கிய கோரிக்கை !

23.02.2021 06:00:00

 

புதிதாக அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் தொடர்பான பராமரிப்பு குறித்து வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் வடக்கு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில், “புதிதாக யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக பல சர்ச்சைக்குரிய செய்திகள் ஊடகங்களில் வெளிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

1960-களில் நிர்மாணிக்கப்பட்டு யுத்த சூழ்நிலையில் சேதமடைந்து திறந்தவெளி அரங்குக்குப் பதிலாக இந்தக் கலாசார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்த திறந்தவெளி அரங்கானது, யாழ். மாநகர சபைக்குரிய ஆதனத்தில், மாநகர சபையின் செலவில் நிர்மாணிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டதாகும்.

இந்நிலையில், இந்தியாவின் பாரிய முழு நிதிப் பங்களிப்பின் மூலம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இந்த கலாசார மத்திய நிலையம் அவ்விடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் பராமரிப்புக்குப் போதுமான நிதிவசதி யாழ். மாநகர சபையிடம் இல்லையென்பது யதார்த்தமானது. எனினும், அதன் நிர்வாகம் மாநகர சபையிடமே இருத்தல் வேண்டும் என்பது எவ்வித கேள்விகளுக்கும் அப்பாற்பட்டது.

எனவே, இந்த விடயத்தில் தனித்து மாநகர சபை மீது பாரிய நிதித் தாக்கத்தைச் சுமத்தி மக்களின் சேவைகளைப் பாதிக்காத வகையில் நிதி மூலங்களுக்கான வாய்ப்புக்களை வடக்கு மாகாண நிர்வாகமும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இந்த நிதித்தாக்க விடயத்தில் கவனமும் கட்டுப்பாடும் செலுத்த வேண்டுமென அன்புடன் வேண்டுகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.