60 வருட பாடகி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ். ஜானகி

1474522972-1462 எஸ்.ஜானகிக்கு இப்போது 78 வயதாகிறது. இப்போதும் திரைப்படங்களில் தனது மங்காத குரல்வளத்தால் அவ்வப்போது பாடி வருகிறார். சினிமாவிலும், மேடைகளிலும் பாடியது போதும் என்ற மனநிறைவை அவர் எட்டியிருப்பதாக தெரிகிறது. அதனால், இனிமேல் பாடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

எஸ். ஜானகி 1957 -ஆம் ஆண்டு வெளியான, விதியின் விளையாட்டு தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார். அந்த வருடத்திலேயே அவர் மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் பாடி, அந்த மொழிகளிலும் அறிமுகமானார். அதன் பிறககு எஸ். ஜானகியின் மயக்கும் குரல் இந்த மும்மொழிகளிலும் தொடர்ந்து ஒலித்தபடி இருந்தது.

வயதான காலத்திலும் குழந்தைகளுக்காக அவர் பாடியிருக்கிறார். குழந்தைகளின் குரலில் பேசுவதே சிரமம். ஜானகி அற்புதமாக பாடவும் செய்வார். இதேபோல் பல திறமைகள் கொண்டவர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒரியா என பல மொழிகளில் இதுவரை நாற்பத்தெட்டாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் பாடியுள்ளார். அதேபோல் சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்குமுறை பெற்றுள்ளார். சிறந்த பாடகிக்கான மாநில விருதை 32 முறை பெற்று சாதனை படைத்துள்ளார். இதுதவிர வேறு பல விருதுகளும் ஜானகியின் சாதனையில் அடங்கும்.

திறமையும், புகழும் எந்தளவு இருந்ததோ அதேயளவுக்கு அடக்கமும், பண்பும் நிரம்பப் பெற்றவர். அவரை தனது 10 கல்பனைகள் படத்தில் பாட வைப்பதற்காக இயக்குனர் டான் மேக்சும், இசையமைப்பாளர் மிதுன் ஈஸ்வரனும் அணுகியிருக்கிறார்கள். அம்மா பூவினு என்று தொடங்கும் அந்தப் பாடல் பிடித்துவிடவே பாடுவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஓய்வு விருப்பத்தில் இருந்தவர், இதுவே என்னுடைய கடைசிப் பாடலாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

தமிழில் அறிமுகமான ஜானகியின் கடைசிப் பாடல் தமிழாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், ஜானகியின் முடிவு சற்று ஏமாற்றமளிக்கவே செய்கிறது.

திரையில் மட்டுமின்றி மேடைகளிலும் இனி பாடப் போவதில்லை என்று திட்டவட்டமாக அவர் அறிவித்துள்ளார். காது உள்ளவரை கேட்பதற்கு அவர் பாடிய பாடல்களே ஏராளமாக இருக்கின்றன.

LEAVE A REPLY