230 விமானங்கள் பிரமாண்ட போர் ஒத்திகை அமெரிக்கா- தென்கொரியா கூட்டாக நடவடிக்கை

கடந்த மாதம் 29-ந் தேதி வடகொரியா, ஹவாசாங்-15 என்னும் அதிநவீன ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தியது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்தது. இந்த சோதனையால் வடகொரியாவின் அண்டை நாடுகளான தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

ஹவாசாங்-15 ரக ஏவுகணை சோதனையால் வடகொரியா சர்வ வல்லமை பெற்ற அணு ஆயுத நாடாக திகழ்கிறது என்று பிரகடனம் செய்து அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கொக்கரிக்கவும் செய்தார். அந்த நாட்டு மக்களும் இதை மிகப்பெரும் சாதனை என்று கூறி கடந்த 2-ந் தேதி கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிரமாண்ட போர் ஒத்திகை

ஹவாசாங்-15 ஏவுகணை சோதனை தனது நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்பதை உணர்ந்த அமெரிக்கா இதற்கு உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்தது. குடியரசு கட்சியை சேர்ந்த பிரபல எம்.பி. லின்ட்சே கிராஹாம் கூறுகையில், வடகொரியாவின் இந்த நடவடிக்கையால் அந்த நாட்டின் மீது முன்கூட்டியே அமெரிக்கா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்தநிலையில், வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரிய தீபகற்ப பகுதியில் பிரமாண்ட வான்வழி போர் ஒத்திகையை நேற்று தொடங்கின.

வடகொரியா அதிர்ச்சி

5 நாட்கள் நடைபெறும் இந்த போர் ஒத்திகையில், அமெரிக்காவின் அதிநவீன ரக போர் விமானங்களான எப்-22 ராப்டர், எப்-35 உள்ளிட்ட 230-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் கலந்துகொள்கின்றன. தென்கொரியா தன் பங்கிற்கு எப்-15 கே., கே.எப்-16, எப்-5 ஆகிய நவீன போர் விமானங்களை களம் இறக்கி உள்ளது. இது தவிர இரு நாடுகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விமானப்படை வீரர்களும் போர் ஒத்திகையில் இணைந்துள்ளனர்.

எப்-22 ராப்டர் ரக போர் விமானங்கள் அதிகபட்சமாக மணிக்கு 2,410 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியவை. சுமார் 3 ஆயிரம் கி.மீ. தூரம் வரை தொடர்ச்சியாக பறந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் வலிமையும் கொண்டவை. போர் ஒத்திகையில் ஈடுபடுவதற்காக இந்த ரகத்தை சேர்ந்த 6 போர் விமானங்களை தென்கொரியாவுக்கு அமெரிக்க விமானப்படை அனுப்பி வைத்துள்ளது.

அமெரிக்கா, தென்கொரியா வான்வழி போர் ஒத்திகையால் வடகொரியா அதிர்ச்சி அடைந்துள்ளது. இது வழக்கமான போர் ஒத்திகை என்றாலும் கூட இந்த அளவிற்கு வான்வழியில் இருநாடுகளும் போர் விமானங்களை பயன்படுத்துவதால் அணு ஆயுத போரில் ஈடுபட எங்களை அமெரிக்கா வம்புக்கு இழுக்கிறது என்று வடகொரியா குற்றம்சாட்டி உள்ளது.

LEAVE A REPLY