2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தமிழகத்தில் தடை – முதல்வர்

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (செவ்வாய் கிழமை) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இது சம்பந்தமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, மற்றும் தயாரிப்பிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். பால் பாக்கெட், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்றும் பிளாஸ்டிக் பை, பாட்டில்கள் தயாரிப்பு விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும் போது வெளிப்படும் நச்சுக் காற்றால் சுவாசிப்பதில் பிரச்னை ஏற்படுவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் கால்நடைகளும் பாதிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். இதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் ஒத்துழைப்பு தறுமாறு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

நீட் தேர்வில் தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை தொடர்பாக பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற அரசு எடுத்த நடவடிக்கை என்ன என தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் நீட் தேர்வில் வடமாநில மாணவர்களே அதிகம் வெற்றி பெற்றுள்ளதாகவும், 2017-ல் அனிதாவையும் இந்த ஆண்டு பிரதீபாவையும் இழந்திருக்கிறோம். இன்னும் எத்தனை அனிதா, பிரதீபாக்களை இழக்க போகிறோம்? என்றும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு என்ன செய்தது? எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

நீதிமன்ற தீர்ப்பை மதித்து வேறு வழியில்லாமல் நீட் தேர்வை பின்பற்ற வேண்டியதாகிவிட்டது, நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கவில்லை என சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலினின் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார்.

இது தொடர்பாக பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், நீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது என்றும் நீட் தேர்வை கொண்டு வந்ததே மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தான் என்றும் கூறினார்.

இதனால் சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

LEAVE A REPLY