2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும்; பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்துள்ள பேட்டியில், பா.ஜ.க. 2014 தேர்தலை விட அடுத்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும். வருகிற மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியை பிடிக்கும் என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்பொழுது, சமூக வலை தளங்களில் பா.ஜ.க.வுக்கு எதிராக நக்சலைட்டுகளும் கருத்து தெரிவிக்கின்றனர். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பா.ஜ.க.வின் ஆலோசனையை கேட்கமாட்டார் என்றும் கூறினார்.

சாமானியனின் குரல் சர்க்காருக்கு தெரியவில்லை என நமது அம்மா நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வின் நாளிதழில் வெளியான விமர்சனம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு தூணுக்கு பின்னால் நின்று பேசுவதற்கு பதிலளிக்க முடியாது என கூறினார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கை காட்டுபவரே பிரதமர் ஆவார் என அக்கட்சியின் பொருளாளர் துரை முருகன் பேசியது பற்றி பொன். ராதாகிருஷ்ணன் கூறும்பொழுது, பிரதமரை தேர்வு செய்யும் தகுதி தமிழகத்தில் எந்த கட்சிக்கும் கிடையாது என கூறினார்.