20 வது திருத்த சட்டம் – நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப அரசாங்கம் செயற்பட வேண்டும்

20 வது திருத்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுப்பதைவிட மக்களின் இன்றைய நிலைமையை சமாளிப்பதற்கும் அதற்கு அவர்களுக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதுமே அரசாங்கத்தின் பாரிய ஒரு பொறுப்பாகும் எனவே எதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை மக்கள் பக்கம் இருந்து தீர்மானிக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி அரசாங்கம் 20 வது திருத்த சட்டத்திற்குள் தங்களை கட்டுப்படுத்தி கொள்ளாமல் நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப அரசாங்கம் செயற்பட வேண்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேலுசாமி இராதாகிருஸ்ணன் இன்று (14) கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் அவசர அவசரமாக 20 வது திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை எடுப்பதைவிட இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும். 20 வது திருத்த சட்ட மூலம் அவசரமாக கொண்டுவர வேண்டிய ஒரு தேவை தற்போது இல்லை.

இன்று இலங்கையில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகின்றது. கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. சமூக பரவல் என்ற ஒரு நிலையை இன்று கொரோனா தொற்று அடைந்துள்ளது. எனவே, அரசாங்கம் ஏனைய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதைவிட கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் 123 குடும்பங்களை சேர்ந்த 517 பேர் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரையில் அரசாங்கத்தால் எந்தவிதமான உதவிகளும் செய்யப்படவில்லை. எனவே, இது தொடர்பாக தகவல்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அநேகமானவர்கள் குறைந்த வருமானத்தை பெற்றுக் கொள்கின்றவர்கள். எனவே, அவர்களுக்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதிலும் பெரும் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. எனவே, இவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றார்கள். அவர்கள் காலையில் பரீட்சைக்கு வருகின்ற பொழுது காலை உணவு மற்றும் பகல் உணவு போன்றவற்றிற்கு எவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை கிராம உத்தியோகஸ்தர்கள் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, இன்றைய சூழ்நிலையில் அரசாங்கம் 20 வது திருத்த சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கும் அதனை நிறைவேற்றுவதற்கும் முயற்சிகளை செய்வதை விட்டுவிட்டு கொரோனாவை கட்டுப்படுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

20 வது திருத்த சட்டம் மூலம் இல்லை என்பதால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இரண்டு கட்சிகளில் இருந்து ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவு செய்யப்பட்டிருந்த காரணத்தாலேயே நல்லாட்சி அரசாங்கத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. ஆனால் இன்று அப்படி ஒரு நிலைமை இல்லை. ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவே அவர்கள் இருவரும் மிகவும் விட்டுக்கொடுப்புடனும் சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் செயற்பட முடியும். அதனை உணர்ந்து ஜனாதிபதியும் பிரதமரும் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கையும் எமக்கு இருக்கின்றது.

அரசாங்கம் 20 வது திருத்த சட்டத்திற்குள் தங்களை கட்டுப்படுத்தி கொள்ளாமல் நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.