2ஜி வழக்கு: 6 மாதங்களில் விசாரணையை முடிக்க சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மன்மோகன்சிங் தலைமையிலான கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, மத்திய கணக்கு தணிக்கை துறை நடத்திய ஆய்வில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஊழல் இந்தியாவில் நடந்த ஊழல்களில் மிகப்பெரிய ஊழலாக பேசப்பட்டது.

இதனை அடுத்து கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.

அப்போது தொலைபேசி உரையாடல்கள் மூலம் இந்த ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அப்போதைய தொலை தொடர்பு மந்திரியாக இருந்த ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட பலர் கடந்த 2010ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

டெல்லி திகார் ஜெயிலில் அவர்கள் அடைக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு பிறகு ராசாவும், கனிமொழியும் சொந்த ஜாமீனில் விடுதலை ஆனார்கள்.

அவர்களை தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளான மற்றவர்களும் விடுதலை பெற்றனர். இந்த நிலையில் இந்த ஊழல் வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ஓ.பி.சைனி விசாரணை நடத்தினார்.

கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடந்த நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21-ந்தேதி காலை தீர்ப்பு வெளியிடப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனியால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்த வழக்கில், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் உள்ளிட்ட தொடர்புடைய வழக்குகளில் 2 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறையினர் இந்த வழக்குகளில் 6 மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுபோன்ற உணர்வுப்பூர்வ விவகாரங்களில் நீண்ட நாட்களாக நாட்டு மக்களை இருளில் வைத்திருக்க கூடாது. இதன்மீது நடந்து வரும் விசாரணையானது நீண்ட நாட்களாக தொடருகிறது என்பது கோர்ட்டின் கவனத்திற்கு வந்துள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில், கடந்த 2014ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டால் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. அவருக்கு பதிலாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹத் வழக்கறிஞராக நியமிக்கப்பட மத்திய அரசுக்கு நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY