19ஆவது திருத்தத்தை திருத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்: அஜித் பீ பெரேரா

இலங்கை அரசியலமைப்பிலுள்ள 19ஆவது திருத்தத்தில் மாற்றங்களை செய்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோமென நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் 71 ஆவது சரத்தின்படி ஜனாதிபதிக்கு இல்லை.

மேலும், நாட்டின் ஜனநாயகத்தை கேள்வி குறியாக்கியுள்ள தரப்பினர் தற்போது 19 ஆவது திருத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி தமக்கு ஏற்றவாறு அரசியலமைப்பை மாற்ற முயல்கின்றனர்.

இவ்வாறு ஜனநாயகத்தை பாதிப்படைய செய்து தமது பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கைக்கு எதிராக ஐ.தே.க போராடி ஜனநாயகத்தை தொடர்ந்து பாதுகாக்கும்” என அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.