13வது திருத்தம்: இந்திய பிரதமர் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை- கெஹெலிய

13வது திருத்தம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை வலுப்படுத்துவதற்கான நிதியை பெறுவதாயின், 13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய பிரதமரிடமிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன என செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையிலேயே கெஹெலிய ரம்புக்வெல குறித்த தகவலை நிராகரித்து, இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி, 13ஆவது திருத்தத்துடன் தொடர்புபட்டதில்லை.

மேலும், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில்13 பிளஸ் குறித்து பேச்சுக்கள் காணப்பட்டன.

பல கலந்துரையாடல்களின் பின்னர் கருத்துடன்பாட்டின் அடிப்படையில் 13வது திருத்தம் குறித்து முடிவெடுக்கப்படும். தனியொருவரின் கருத்தினை அடிப்படையாக வைத்து ஒருபோதும் முடிவு எடுக்கமாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.