13ஐ ரத்துசெய்ய ஐக்கிய மக்கள் சக்தி உடன்படாது: நாடாளுமன்ற உறுப்பினர் காட்டம்!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச்செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உடன்படாது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த திருத்தத்தில் உள்ள சில குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான ஆதரவுகளை வழங்குவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீலங்கா பிரதமரிடம் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற இணையவழி சந்திப்பின் போது கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் 13ஆவது திருத்தத்தை ரத்துச்செய்வதற்கு தமது கட்சி உடன்படாது. பினர் எனினும் அதில் உள்ள குறைப்பாடுகளை திருத்துவதற்கு தமது கட்சி உடன்படும்.

இதேவேளை மாகாணசபை முறையை உரிய முறையில் செயற்படுத்திக்கொள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எவரும் செயற்படவில்லை.

எனினும் வடமேல்மாகாணசபையின் முன்னாள் முதல்வர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா மாத்திரமே மாகாணசபைக்கு உரிய அதிகாரங்களை பெற்றுக்கொடுத்ததாக மேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் நிரோசன் பாதுக்க ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.