13ஐ மாற்ற நினைப்பது நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் தள்ளிவிடும் முயற்சியே- கருணாகரம்

13ஆவது திருத்தச் சட்டத்தை மாற்ற நினைப்பது நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள், போராட்டக் களத்திற்குள் தள்ளிவிடும் முயற்சியே என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பபு நாடளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல தியாகங்களிற்குப் பின்னர், பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் இதுவே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “2020 நாடாளுமன்றத் தேர்தல் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு சரிவைக் கொடுத்துள்ளது. அதேவேளை வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்திய வேட்பாளர்களாக களமிறங்கிய ஐந்து பேர் அரசாங்க கட்சியில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தெற்கில் சிங்கள மக்கள் பொதுஜன பெரமுனவுக்கு பேராதரவை வழங்கி 145 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழர்கள் தரப்பிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள் பேசவேண்டிய தேவையில்லை என தற்போது அரசாங்கம் கூறுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் தமக்குச் சார்பானவர்களை தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.

இதேவேளை, கடந்த காலங்களில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தினால் ஏற்பட்ட அழிவு என்வென்பதை மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்ற ராஜபக்ஷ சகோதரர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டத்தை மாற்ற வேண்டும் அல்லது இல்லாமாக்க வேண்டும் என்று அரசாங்கத் தரப்பினர் தற்போது கூறிக்கொண்டிருக்கின்றனர்.

13ஆவது திருத்தச் சட்டம் பல தியாகங்களிற்குப் பின்பு, பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின்பு இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமாகும்.

அன்றைய இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை வற்புறுத்தி கிட்டத்தட்ட அவரது கையை முறுக்கி கையொப்பமிட்ட அந்த ஒப்பந்தத்தை இல்லாமல் செய்வதற்கு முயற்சிப்பதானது இந்த நாட்டை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் போராட்டக் களத்திற்குள் தள்ளிவிடும் முயற்சியாகும்.

இந்நிலையில், இந்தியா அந்த ஒப்பந்தத்தை இல்லாமல் செய்வதை பார்த்தக்கொண்டிருக்கும் என்று நினைக்கவேண்டாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள, ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாக மார்தட்டும் உங்களுக்கு இந்த இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான, நீதியான, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்துவைக்கூடிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை உள்ளது” என்று குறிப்பிட்டார்.