11 நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகங்களின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் 11 நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகங்களின் நடவடிக்கைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் மட்டுப்படுத்துவதற்கு வௌிநாட்டு உறவுகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ட்ரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கான தூதரங்களின் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

உலக நாடுகள் விமான பயணங்களுக்கு தடை விதித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தில் 110 பேருக்கும் அதிகமானோர் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவு உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே சுகாதார அமைச்சு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொண்ட நபர்கள் தொடர்பாக சோதனைகளை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதிப்பதற்கோ அல்லது வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டோர் சிகிச்சை பெறுவதற்கோ தனியார் வைத்திசாலைகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அத்துடன்,சிகிச்சைகளுக்காக அரச வைத்தியசாலைகளுக்கு மாத்திரமே செல்ல வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.