1.7 மில்லியன் புதிய வாக்காளர்களை குறிவைக்கிறது ஐதேக

அடுத்த அதிபர் தேர்தலில் புதிதாக பதிவு செய்து கொண்ட 1.7 மில்லியன் வாக்காளர்களும் தீர்க்கமான பங்கை வகிப்பார்கள் என, ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

”எனவே, சுத்தமான வேட்பாளர் ஒருவரை விரும்பும் இந்த வாக்காளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச வேண்டும்.

அதிபர் தேர்தல் தான் முதலில் நடைபெறும். ஐதேக இப்போது மிகவும் பலமாக உள்ளது. பொதுத்தேர்தலுக்கும் கூட தயாராக இருக்கிறது.

அதிபர் வேட்பாளர் விடயத்தில் ராஜபக்சவினர் மத்தியில் ஒற்றுமை இல்லை.

குமார வெல்கம போன்ற சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள், கோத்தாபய ராஜபக்சவை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

மூத்த அரசியல்வாதியான சமல் ராஜபக்ச, தான் புறக்கணிக்கப்பட்டால் அது அநீதியானது என உணரலாம்.

ஐதேகவிலும் சிறிய சிறிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் ஏனைய கட்சிகளை விட, ஒற்றுமையும், நல்லிணக்கமும் அதிகம் இருக்கிறது.

குறிப்பிட்ட குடும்பங்களுக்குள் ஐதேக சிக்கியிருக்கவில்லை. சஜித் பிறேமதாச, மற்றும் என்னைப் போன்ற இரண்டாவது நிலைத் தலைவர்களை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உருவாக்கியிருக்கிறார்.” என்றும் அவர் கூறியுள்ளார்.