ஹிஸ்புல்லாவை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை அப்பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு விடுத்த அழைப்பினை ஏற்று, இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி மட்டக்களப்பு நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பாடசாலைகள், அலுவலகங்கள் இயங்கிய போதிலும், மாணவர்களினதும், மக்களினதும் வரவு இன்மையினால் வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துசபை பேருந்துகள் மட்டுமே போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டுள்ளதுடன், தனியார் போக்குவரத்து சேவைகள் முற்றாக ஸ்தம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் மாத்திரம் வெள்ளிக்கிழமை என்ற போதிலும் வழமைக்கு மாறாக வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுவாஞ்சிகுடி, ஏறாவூர் மற்றும் சில பகுதிகளில் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டுள்ளதோடு, சில இடங்களில் பேருந்துகளின் மீது கல்வீச்சு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.