ஹிஸ்புல்லாவின் சர்ச்சைக்குரிய பல்கலை குறித்து ஆராய விசேட குழு பயணம்!

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற உயர் கல்வி ஆலோசனைக் குழு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தலைமையில் இக்குழுவினர் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளனர். அத்தோடு பல்கலைக்கழகம் குறித்து ஆராயவுள்ளனர்.

அதன்பின்னர் ஆய்வறிக்கையை உயர் கல்வியமைச்சுக்கும் நாடாளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாக குழுவின் தலைவர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா? பல்கலைக்கழகமானது உயர்கல்வி சட்டதிட்டங்களை மீறியுள்ளதா என்பது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த குழு ஆராயவுள்ளது.

குறித்த பல்கலைக்கழகம் குறித்து தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி குழுவானது இவ்விடயம் குறித்து ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.