ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா உள்ளிட்ட 72 பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்க பாகிஸ்தான் அரசு தடை

உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்து வரும் பாகிஸ்தான், அதற்காக அந்த நாட்டிடம் இருந்து பெரும் நிதி உதவி பெற்று வந்தது. ஆனால், பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து கொண்டு செயல்பட்டு வருகிற ஹக்கானி, அல்கொய்தா, தலீபான் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கையை எடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது.

புத்தாண்டையொட்டி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட தனது முதல் பதிவிலேயே இதற்காக பாகிஸ்தானை கடுமையாக சாடினார். அதைத் தொடர்ந்து அந்த நாட்டுக்கு வழங்கி வந்த அனைத்து ராணுவ நிதி உதவிகளையும் நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இது பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்தது. அது மட்டுமின்றி பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்து ஆக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து மூளையாக செயல்பட்டு, மும்பை தாக்குதல்களை அரங்கேற்றிய சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்பு, லஷ்கர் இ தொய்பா, மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 72 அமைப்புகளுக்கு நிதி அளிப்பதற்கு தடை விதித்து அந்த நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான உத்தரவில், “பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு சட்டம் 1997-ன் கீழும், 1948-ம் ஆண்டின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சட்டத்தின்படியும், தடை செய்யப்பட்ட அமைப்புகள், கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கு நிதி வழங்குவது சட்டப்படி குற்றம் ஆகும். இந்த அமைப்புகளுக்கோ, அவற்றுடன் தொடர்புடைய தனி நபர்களுக்கோ யாரேனும் நிதி உதவி வழங்கினால், அவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத்தண்டனையோ அல்லது ரூ.1 கோடி அபராதமோ அல்லது இரண்டுமோ கூட விதிக்கப்படும். அவர்களின் அசையும் சொத்துக்களும், அசையா சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, பாகிஸ்தானில் இருந்து வெளியாகிற அனைத்து முக்கிய செய்தித்தாள்களிலும் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் டெஹ்மினா ஜன்ஜூவா, பாகிஸ்தான் வெளியுறவு கொள்கை விவகாரங்கள் குறித்து உரை ஆற்றும்போது, “அமெரிக்காவுடனான உறவை பாகிஸ்தான் முடிந்தவரைக்கும் தொடரும். அமெரிக்காவுடனான உறவு முக்கியமானது. அமெரிக்கா உலக வல்லரசாக திகழ்வதோடு மட்டுமின்றி, இந்த பிராந்தியத்தில் தன் இருப்பைக் கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்க பாகிஸ்தான் விதித்துள்ள தடை, ஹபீஸ் சயீத்துக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தனது அமைப்புக்கு நிதி வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ள பாகிஸ்தான் அரசின் ராணுவ மந்திரி குர்ரம் தஸ்தகீரிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

வக்கீல் ஏ.கே. தோகர் அனுப்பியுள்ள நோட்டீசில், “இந்த நோட்டீஸ் கிடைத்த 14 நாட்களுக்குள் நீங்கள் (மந்திரி குர்ரம் தஸ்தகீர்) எனது கட்சிக்காரரிடம் (ஹபீஸ் சயீத்) எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY