ஸ்ரீலங்காவின் தற்போதைய பரிதாப நிலை கண்டு பெரும் கவலையில் ஐ.நா விசேட அறிக்கையாளர்

பொதுத்தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் காணப்படும் நிலவரம் குறித்து ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் என் வுயுல் கவலை வெளியிட்டுள்ளார்.

சட்டத்தின் ஆட்சி மற்றும் குடிகளுக்கான இடம் ஆகியவை தொடர்பில் கிடைக்கப்பெற்ற பலாபலன்களின் எதிர்காலம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக அவர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கைக்கான தனது விஜயம் குறித்து சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனது விஜயம் இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னரும், ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற ஆறுமாத காலத்திற்கு பின்னரும் நான் விஜயம் மேற்கொண்டவேளை பார்த்த சூழமைவு மாற்றமடைந்துள்ளமை குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை அரசசார்பற்ற அமைப்புகளின் செயலகம் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டிலிருந்து வேறு அமைச்சுக்கு மாற்றப்பட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் டிசம்பர் பத்தாம் திகதி அரசசார்பற்ற அமைப்புகளின் செயலகம் மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் வசம் சென்றுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது என ஐ.நாவின் விசேட பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசசார்பற்ற அமைப்புகளிற்கான செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்படாத அரசசார்பற்ற அமைப்புகளை சட்டவிரோதமானவை என தேசிய பாதுகாப்பு தொடர்பான அறிவிக்கவேண்டும் என நாடாளுமன்ற குழுவொன்று பரிந்துரைசெய்துள்ளது என எனக்கு தகவல் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 பெப்ரவரியில் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான இடமொன்று உருவாக்கப்பட்டதுடன் இதுவே ஆர்ப்பாட்டம் செய்வதற்கான இடமாக அறிவிக்கப்பட்டதுடன் ஏனைய இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலை குறைப்பது, நாளாந்த வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுவதை குறைப்பது ஆகிய காரணங்களை காட்டி சிலர் தரப்பினர் இதனை வரவேற்றிருக்கலாம் என தெரிவித்துள்ள ஐநாவின் விசேட அறிக்கையாளர் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை அரசையும் பொதுமக்களையும் ஈர்ப்பதற்காக பொதுஇடங்களிலேயே பயன்படுத்தப்படுகின்றது இதன்காரணமாக பேச்சுவார்த்தைகள்,சகிப்புதன்மை, பரந்தமனப்பான்மை போன்றவை உருவாகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் அவற்றை கட்டுப்படுத்துவது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான நோக்கத்திற்கு முரணானது எனவும் ஐநாவின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் சிவில் சமூக பிரதிநிதிகளை கண்காணிப்பது,துன்புறுத்துவது விசாரிப்பது அச்சுறுத்துவது அதிகரித்துள்ளது என எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு சென்று திரும்பிய சிவில் சமூக பிரதிநிதிகள் பழிவாங்கப்படும் நடவடிக்கைளும் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடந்த வருடம் நான் விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜனநாயக மயப்படுத்தல்,நல்லாட்சி,யுத்தத்திற்கு பிந்தைய நல்லிணக்கம்,நிலைமாற்றுக்கால நீதி தொடர்பில் சில முக்கிய விடயங்கள் சாதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த விடயங்கள் தொடர்பில் முன்னேற்றங்கள் நிகழவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சிலபகுதிகள் தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்டிருப்பது இந்த தனித்துவமான உரிமைகளை அடைவதற்கு தடையாகவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.