ஸ்பெயினுடன் வர்த்தக – சுற்றுலாத்துறையை மேம்படுத்த சீனா எதிர்பார்ப்பு

ஸ்பெயினுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், ஸ்பெயினின் முக்கிய நிறுவனத் தலைவர்களை சந்திக்க எதிர்பார்த்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலேயே இச்சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி நேற்று (செவ்வாய்க்கிழமை) தலைநகர் மட்ரிட்டை சென்றடைந்தார்.

அங்கு சீன ஜனாதிபதிக்கு, ஸ்பெயின் மன்னர் ஆறாவது ஃபெலிப் தலைமையில் அரச மாளிகையில் பலத்த வரவேற்பளிக்கப்பட்டது.

சீன ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் போது இரு தரப்பிற்கும் இடையே ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்பெயின் அரச வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.