ஸ்டெர்லைட் ஆலை வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தமிழக அரசை பதில் மனுத்தாக்கல் செய்யும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் வழக்கில் தருண் அகர்வால் குழு அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, அதற்கு பதில் மனுவை தாக்கல்செய்யும்படி தீர்ப்பாயம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வுசெய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் தெரிவித்தன.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு கடந்த 26ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர், சென்னை நகரிலும் விசாரணை மேற்கொண்டனர். ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.

இந்தநிலையில் ஸ்டெர்லைட் வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ஒத்திவைத்துள்ளனர்.