ஸ்டாலின் இரங்கல் – ரஷ்ய தமிழறிஞர் பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி

ரஷ்ய நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனாவால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் – ஆய்வாளர் – பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா பெருந்தொற்றால் மறைவெய்தியது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

பொன்னியும் – வைகையும் – பொருநையும் இன்னும் பல ஆறுகளும் பாய்ந்து வளம் செழிக்கச் செய்த தமிழ்ப் பண்பாட்டினை – இலக்கியத்தினை – வரலாற்றினை வால்கா நதி பாயும் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிற்றுவித்தவர் அறிஞர் துப்யான்ஸ்கி. சோவியத் யூனியனில் இருந்த பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்தபிறகு, அங்கே தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்து போன நிலையில், பேராசிரியர் துப்யான்ஸ்கி தன் சொந்த முயற்சியாலும் ஆய்வுப் பார்வையாலும் தமிழ் வளர்க்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது போற்றுதலுக்குரியதாகும்.