வேளாங்கண்ணியை மேம்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல்: மேலும் 7 சுற்றுலா தலங்களுக்கும் நிதி ஒதுக்கீடு

Tamil_News_large_1373972தமிழகத்தின் வேளாங்கண்ணி உட்பட, நாடு முழுதும், எட்டு பாரம்பரிய சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் செயல் திட்டத்துக்கு, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்துக்கு, 431 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.


நாடு முழுவதும் உள்ள, பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்காக, ‘ஹிருதய்’ எனப்படும், பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்ற, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேம்படுத்த…இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த, எட்டு சுற்றுலா தலங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேளாங்கண்ணி; உ.பி.,யில் வாரணாசி, மதுரா; ராஜஸ்தானில் அஜ்மீர்; குஜராத்தில் துவாரகா; கர்நாடகாவில் பதாமி; தெலுங்கானாவில் வாரங்கல்; ஆந்திராவில் அமராவதி ஆகிய நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த நகரங்களில், ‘ஹிருதய்’ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் மதுசூதன பிரசாத் தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இதில், சம்பந்தபட்ட மாநிலங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த அறிக்கையையும், மாநில அரசு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளிடம் அளித்தனர்.
செயல் திட்டம்:

இதையடுத்து, இந்த எட்டு சுற்றுலா தலங்களையும் மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்துக்கு, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்துக்காக, ஒட்டு மொத்தமாக, 431 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:இந்த நகரங்களில், வேறு பல திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏற்கனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நிதியும், ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்:

தற்போது, இந்த நகரங்களை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், கட்டுமானம் மற்றும் நகர வடிவமைப்பு துறை நிபுணர்கள் பிமல் படேல், கே.டி.ரவீந்திரன், கிஷன் ராவ் மற்றும் சுற்றுலா, கலாசாரம், நீர்வளம், நிதி – ஆயோக், தொல்பொருள் ஆராய்ச்சி துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

என்ன வசதிகள் கிடைக்கும்?

* இயற்கை வளங்கள் பாதுகாத்து பராமரிக்கப்படும்
* போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும்
* திடக்கழிவு மேலாண்மை மூலம் சுகாதார வசதி ஏற்படுத்தப்படும்
* மொழிபெயர்ப்பு மையங்கள் அமைக்கப்படும்
* பாரம்பரிய சின்னங்கள், அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்படும்
* பசுமையான சூழலை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

வேளாங்கண்ணிக்குஎன்ன கிடைக்கும்?

‘ஹிருதய்’ திட்டத்தின் கீழ், வேளாங்கண்ணிக்கு மட்டும், 42.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், எட்டு கோடி ரூபாய் செலவில், கலாசார பூங்கா அமைக்கப்படும். புதிய பேருந்து நிலையம், ஆறு கோடி ரூபாய் செலவில் வேறு இடத்துக்கு மாற்றப்படும்.

மற்ற நகரங்களுக்குஒதுக்கீடு எவ்வளவு?

வாரணாசிக்கு, 130 கோடி ரூபாயும்; மதுராவுக்கு, 42 கோடி ரூபாயும்; அஜ்மீருக்கு, 60 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.துவாரகாவுக்கு, 19 கோடி ரூபாயும்; பதாமிக்கு, 62 கோடி ரூபாயும்; வாரங்கல்லுக்கு, 73 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY