வேட்பாளர்களின் விபரங்களைத் திரட்டும் சிறிலங்கா இராணுவம் – நியாயப்படுத்துகிறார் தளபதி

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்களை இராணுவம் வைத்திருக்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

”வேட்பாளர்கள் மற்றும் சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களின் விபரங்களைத் திரட்டுவதால், அவர்கள் கண்காணிக்கப்படுவதாக அர்த்தமில்லை.

வேட்பாளர் அல்லது ஏனையவர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய சூழல் ஒன்று ஏற்பட்டால், அவர்களைப் பற்றிய பின்னணித் தரவுகள் இராணுவத்துக்குத் தேவை.

அத்தகைய ஒரு சூழல் ஏற்பட்ட பின்னர் தகவல்களைச் சேகரிப்பதற்காக காத்திருக்க வேண்டியதில்லை.

சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரத்தை கையாள்வது காவல்துறையின் கடமை என்றாலும், தகவல் சேகரிப்பு தேவையாக உள்ளது. முன்னாள் படையினர், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்கள் தேர்தலில் போட்டியிட முனைந்தால், அவர்கள் பற்றிய தகவல்கள் இராணுவத்துக்குத் தேவை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி, போரின் போது சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களை இழைத்தது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவம் சித்திரவதைகளில் தொடர்புபடவில்லை என்றும் ஜோசப் முகாம் இப்போது இல்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY