வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் – ஜனாதிபதி அதிரடி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நானே உள்ளேன். இந்தக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்.

இந்த இரண்டு தேர்தல்களுக்கும் முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடக்கும். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. இந்த மூன்று தேர்தல்களும் நீதியாக நடைபெற அனைத்துத் தரப்புகளும் ஒத்துழைக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறவுள்ளது எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பங்காளிக் கட்சியாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் எனவும் சிலர் விசமத்தனமான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நானே உள்ளேன். இந்நிலையில், எனது அனுமதி இல்லாமல் கட்சியில் உள்ள பலர் பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் நான் நடவடிக்கை எடுக்கவுள்ளேன். எமது கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன். நான் போட்டியிடுவதா? இல்லையா? என்பது குறித்தும் நான்தான் முடிவெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.