வெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினையை தீர்க்க சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் ஒப்பந்தம்

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையரின் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்காக, ஐ.நா.தொழிலுக்காக புலம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்புடன் ஒப்பந்தம் கைச்சாத்திட தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதாவது ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஜப்பான், கொரியா, மலேசியா போன்ற நாடுகளில் தொழில்புரியும் இலங்கையர், சில பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சுகாதாரம், உயிர் பாதுகாப்பை உறுதி செய்தல்,தொழில் ஊடாக ஈட்டிய வருமானத்தை அதிகரித்தல் என்பனவும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஓய்வூதிய யோசனை, சேமலாப நிதியம், அதற்கான வைப்பு நிதியை பெறுதல் மற்றும் பணம் அனுப்புகையில் அறவிடும் அதிக கட்டணத்தை குறைத்தல் என்பன குறித்தும் வெளிவிவகார அமைச்சு, ஐ.நா.தொழிலுக்கான புலம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்புடன் நெருக்கமாக செயற்படுவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையரின் பிரச்சினைக்கு உரிய தீர்வை இதனூடாக பெற்றுக்கொடுக்க முடியுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.