வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

டிடிவி தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் இருவரும் கடந்த 1-ம் தேதி தலைமைச் செயலகத்திற்கு நெடுஞ்சாலைத் துறையின் டெண்டரில் முறைகேடு நடந்ததாகக் கூறி, அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றனர்.அப்போது அவர்களை தலைமைச் செயலகத்தின் உள்ளே அனுமதிக்க போலீஸார் மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் அவர்களை உள்ளே செல்ல விடாமல் காவல்துறை தடுத்ததையடுத்து வெற்றிவேலும், தங்க தமிழ்செல்வனும் சட்டமன்ற கட்டிடத்துக்குள் நுழைந்து பேட்டி அளித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக இருவர் மீதும், சட்டப்பேரவை வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்தது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி இருவரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மதுரையில் 2 வாரம் தங்கியிருந்து தல்லா குளம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் அதன் பின், சென்னை கோட்டை காவல்நிலையத்தில் விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

LEAVE A REPLY