வெற்றியை இலக்காக கொண்டு ரணில் செயற்படுவார் – ஹேசா விதானகே

பொதுத்தேர்தலில் வெற்றியை இலக்காக கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இந்த கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ இன்றி பொதுத்தேர்தலில் வெற்றிபெற முடியாது என கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் எண்ணியுள்ளமை குறித்து இதன்போது ஆராயப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் உறுதியான அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கு இந்த குறுகிய காலத்திற்குள் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்த கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பார் என தான் நம்புவதாகவும் ஹேசா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில் ஹேசா விதானகே இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.