வெறுப்புகளை அழிக்கும் தேவதை!

ஜெர்மனியில் வசிக்கும் 72 வயது இர்மெலா மென்சா, வித்தியாசமான சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார். கடந்த 31 ஆண்டுகளாக ஜெர்மனி முழுவதும் பயணம் செய்து தெருக்களில் எழுதப்பட்டிருக்கும் விரும்பத்தகாத வாசகங்கள், வெறுப்பை உமிழும் போஸ்டர்கள் போன்றவற்றை அழித்து, சுத்தம் செய்கிறார். இதற்காக நவ நாஜிகளிடமிருந்து கொலை மிரட்டல்களைச் சந்தித்து வருகிறார். தினமும் இரண்டு பைகளில் போஸ்டர் சுரண்டும் கருவி, ஸ்ப்ரே பெயிண்ட், கேமரா போன்றவற்றை எடுத்துக்கொண்டு, பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணம் செய்து, குறிப்பிட்ட இடத்தை அடைகிறார். தான் அழிக்க வேண்டிய விஷயங்களைப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ஸ்டிக்கர்களைப் பிய்த்து தனியாக வைத்துக்கொள்கிறார். நாஜி சின்னத்தின் மீது சிவப்பு பெயிண்ட்டால் இதயம், வண்ணத்துப்பூச்சி போன்றவற்றை வரைகிறார். பிரிவினையை விதைக்கும் வாசகங்கள் மீது கறுப்பு பெயிண்ட் அடித்து, அழிக்கிறார். வெறுப்பை உமிழும் போஸ்டர்களைக் கிழித்து, குப்பைத் தொட்டியில் வீசுகிறார். மாலையில் வீடு திரும்பி, ஸ்டிக்கர்களை ஒரு ஃபைலில் ஆவணப்படுத்துகிறார். புகைப்படங்களை பிரிண்ட் எடுத்து, ஆல்பத்தில் வைக்கிறார். மறுநாள் மீண்டும் வேறோர் இடத்துக்குப் பயணிக்கிறார். இந்த நற்செயலுக்காகப் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுவருகிறார் இர்மெலா. இவர் தனி மனிதர்களின் உரிமையில் தலையிடுகிறார், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கிறார் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

“மனிதர்கள் சக மனிதர்களை வெறுப்பது குறித்து எனக்குத் திருமணம் ஆகும் வரை தெரியாது. நான் ஆப்பிரிக்கரைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, வெறுப்பை நேரில் கண்டேன். தெருக்களில் நாங்கள் நடக்கும்போது, முன்பின் தெரியாதவர்கள்கூட என் கணவரைப் பார்த்ததும் வெறுப்பை உமிழ்வார்கள். பேருந்துகளிலும் விமான நிலையங்களிலும் என் கணவர் வெறுப்பின் காரணமாக மிகவும் மோசமாக நடத்தப்பட்டார். நாங்கள் இருவரும் மனத்தால் மிகவும் பாதிக்கப்பட்டோம். இந்த வெறுப்புதானே இரண்டாம் உலகப் போராக உலகையே நாசமாக்கியது. அதைக் கண்டும் மனிதர்கள் இன்னும் வெறுப்பைக் கைவிடவில்லையே என்று வருந்தினேன். இதற்காக என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். 1986-ம் ஆண்டு, வெறுப்பு ஸ்டிக்கர் ஒன்றை முதல்முறை கிழித்தேன். அப்போது நாஜி ஜெர்மனியில் முக்கிய நபராகத் திகழ்ந்த ருடால்ஃப் ஹெஸ் சிறையில் இருந்தார். அவரை ஆதரித்தும் அவருக்கு விடுதலை வேண்டியும் நவ நாஜிகள் எங்கும் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். நாஜிகளின் வெறுப்புக் கருத்துகள் மட்டுமின்றி, மனித குலத்துக்கு விரோதமான வலதுசாரிகளின் கருத்துகளையும் சேர்த்தே அழிக்க ஆரம்பித்தேன். கடந்த முப்பது ஆண்டுகளில் எத்தனையோ முறை கொலை மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கிறேன். ஒருமுறை பெரிய கல்லை யாரோ வீசியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில நேரங்களில் காவல்துறை யினரே என்னை மிரட்டியிருக்கிறார்கள். நான் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை. ஜெர்மனியை இன்னொரு முறை ஹிட்லர் தேசமாக மாற்றுவதற்கு நாம் சிறிதும் இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்தக் காரியத்தை நான் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்?” என்று கேட்கிறார் இர்மெலா.

LEAVE A REPLY