விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் நிகழ்ச்சித் திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

அதிகரித்த மரக்கறி விலைகளை கட்டுப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் நிகழ்ச்சித்திட்டமொன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

மரக்கறிகளின் அதிகரித்த விலை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு பெரிதும் பாதிப்பினை செலுத்துகின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக தலையிட வேண்டியுள்ளதென ஜனாதிபதி இதன்போது, சுட்டிக்காட்டியுள்ளார்.

மரக்கறி பயிரிடப்படும் பிரதேசங்களிலிருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. அதன்பின்னர் தம்புள்ளையில் இருந்து மீண்டும் குறித்த பிரதேசங்களுக்கு மரக்கறிகள் விநியோகிக்கப்படுகின்றன. போக்குவரத்தின்போது இடம்பெறும் வீண்விரயம் காரணமாக அறுவடை பெருமளவு வீணாகின்றது. இது ஒருபோதும் சரியான முறைமையாக இருக்க முடியதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்களிடம் உள்ள அரச காணிகளில் தென்னை பயிருடன் மட்டுப்பட்டு இருக்காது மரக்கறி பயிர்ச் செய்கைக்கான வாய்ப்புகளையும் கண்டறிவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.