விற்பனை வீழ்ச்சி – ஆட்குறைப்பில் இறங்கியுள்ள சாம்சங் நிறுவனம்

1445604741-1676விற்பனை குறைவு காரணமாக இந்தியாவில் உள்ள சாம்சங் நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களில் ஒரு பகுதியினரை வீட்டிற்கு அனுப்ப அந்த நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

இந்தியாவில் கொரிய நிறுவனமாக சாம்சங் தனது கிளை நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் டிவி, பிரிட்ஜ் மற்றும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் கிளைகளில் 22 ஆயிரம் தொழிலாளர்கள் வரை பணியாற்றி வருகின்றனர்.
இதன் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான செல்போன் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியின் காரணமாக இந்நிறுவனத்தின் விற்பனை விகிதம் சற்று குறைந்துள்ளதைத் தொடர்ந்து அதனால் ஏற்படும் இழப்புகளை சரி செய்ய ஏற்கனவே 35 பொது மேலாளர்கள், 4 உயர் நிர்வாக அதிகாரிகளை பணியிலிருந்து நீக்கி உள்ளது.
இந்திய நிறுவனங்களில் நிர்வாகப்பிரிவில் பணியாற்றி வந்த 90 பேரை கடந்த வாரம் வேலையில் இருந்து நீக்கி உள்ளது. மேலும் 125 முதல் 150 தொழிலாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியிருக்கிறது.
இதன் அடுத்தக் கட்டமாக தொழிலாளர்களின் திறன் எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதன் மூலம் சுமார் ஆயிரம் தொழிலாளர்கள் வரை வீட்டுக்கு அனுப்பவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி எச்.சி.ஹாங் வர்த்தகத்தை பெருக்க தேவையான மறுகட்டமைப்புகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY