விரைவில் உள்ளாட்சி தேர்தல் தயாராகுமாறு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதியுடன் முடிந்தது.

இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந்தேதிகளில் நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., “உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை” என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதை ஏற்று உள்ளாட்சித் தேர்தலை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை கவனிக்க தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். அந்த தனி அதிகாரிகளுக்கு 6 மாதத்துக்கு ஒரு தடவை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த மே மாதம் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம், “வாக்காளர் பட்டியல் தயாராகவில்லை” என்று கூறியதால் தேர்தல் தள்ளிப் போனது.

பிறகு ஆகஸ்டு மாதம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது செப்டம்பர் 18-ந்தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோர்ட்டு “கெடு” விதித்தது. ஆனால் இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை மறுவரையறை செய்ய கால அவகாசம் வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. இதனால் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப் போனது.

இதற்கிடையே தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மறு வரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று மறுவரையறை ஆணையம் அறிவித்து இருந்தது.

ஆட்சேபனை, கருத்துகள் சொல்ல வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவதாக இருந்தது. தற்போது அது வருகிற 5-ந்தேதி வரை நீட்டித்து அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இட ஒதுக்கீடு அடிப்படையிலான வார்டு வரையறைகள் முடிவுக்கு வரும்.

வார்டுகளின் எண்ணிக்கைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புப் படி எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுவரையறை செய்துள்ளது. 90 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் வார்டு வரையறை முடிந்து அடுத்த மாதம் அந்த விபரங்களை வெளியிட உள்ளது.

அப்போது உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகள், வார்டுகள் யார், யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விபரம் தெரிய வரும். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிப்பை வெளியிடும்.

இன்று நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகுமாறு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவுறுத்தி உள்ளார்.

துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஆர்.கே.நகர் தேர்தலில் நாம் கடுமையாகத்தான் உழைத்தோம். ஆனாலும் நாம் எளிதில் வெற்றி பெற்று விடுவோம் என்று நினைத்து பலர் மெத்தனப் போக்குடன் இருந்து விட்டனர். அதனால்தான் நமக்கு தோல்வி ஏற்பட்டது.

இதை ஒரு பாடமாக வைத்து அடுத்த ஏப்ரலில் வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் நாம் கடுமையாக பாடுபட்டு வெற்றி பெற வேண்டும். அதற்காக தயாராகுங்கள். பாராளுமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெற உழைக்க வேண்டும்.

டி.டி.வி.தினகரனை நாம் கண்டு கொள்ள தேவையில்லை. அவரை பார்த்தாலும் பேச வேண்டியது இல்லை. அம்மாவின் ஆட்சியில் நடைபெற்ற சாதனை திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சரியான வசதிகள் இப்போது இல்லை என்ற ஆதங்கம் உள்ளது. அதை பூர்த்தி செய்யும் வகையில் அ.தி.மு.க. புதிய தொலைக்காட்சியும், நாளிதழும் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY