வியட்நாமில் டிரம்ப்-புதின் சந்திப்பு பயங்கரவாதிகளை எதிர்த்து இணைந்து சண்டையிட சம்மதம்

வியட்நாம் நாட்டின் தனாங் நகரில் ஆசிய, பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் நேற்று சந்தித்து கை குலுக்கிக் கொண்டனர்.

தொடர்ந்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை முழுமையாக தோற்கடிக்கிற வரையில் இரு தரப்பினரும் இணைந்து அவர்களுக்கு எதிராக சண்டையிட சம்மதம் தெரிவித்தனர்.

சிரியா உள்நாட்டுப் போர் பிரச்சினைக்கு, ராணுவ தீர்வு கிடையாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதை ரஷியாவின் அதிகார மையமான கிரெம்ளின் உறுதி செய்துள்ளது. இதுபற்றி கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதின், டிரம்ப் சந்திப்பை ரஷிய வெளியுறவு மந்திரி செர்கய் லாவ்ரோவ், அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் ஒருங்கிணைத்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரெம்ளின் வெளியிட்ட இந்த அறிக்கை பற்றியோ, டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தை பற்றியோ அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் ஆசிய, பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு பற்றி கருத்து தெரிவிக்கையில், “இந்த உச்சி மாநாட்டின்போது புதினுடன் டிரம்ப் முறைப்படியான பேச்சு வார்த்தை நடத்த மாட்டார்” என்று குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

டிரம்ப், புதின் சந்திப்பு பற்றிய டெலிவிஷன் காட்சிகள், அவர்களது சந்திப்பு இணக்கமாக நடந்ததை சுட்டிக்காட்டும் விதத்தில் அமைந்தன.

LEAVE A REPLY